சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்தது சிபிஐ..!!

சென்னை: சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும், அவரது ஆடிட்டருமான பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260க்கும் அதிகமான சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத விசாக்கள் வழங்கப்பட்டதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

இதற்கிடையே இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக விசா முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. சிபிஐயின் பொருளாதார குற்ற செயல்களை தடுக்கும் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் அரசு வேலையை முறைகேடாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. இதற்கான ஆதாரங்களாக பாஸ்கரன், கார்த்தி சிதம்பரம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் இ மெயில் பரிமாற்றங்களை குறிப்பிட்ட தேதியுடன் சிபிஐ இணைத்துள்ளது.

சீனர்கள் இந்தியா வந்து பணிபுரிய முறைகேடாக விசா பெறுவதற்காக 2011ம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பாஸ்கர ராமன் என்பவர் மூலமாக அணுகியதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் கையூட்டு பெறப்பட்டதாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மேலும் பாஸ்கர ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories: