'இது எனது அரசு அல்ல, நமது அரசு'...மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (18.5.2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA கமிட்டி) முதல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை பின் வருமாறு காணலாம்.

மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சார்பில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான முதல் ஆய்வுக் கூட்டம் இந்தக் கூட்டமாக அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய   நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்சி அமைந்தபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன், இது எனது அரசு அல்ல, நமது அரசு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வகையில் நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருக்கிறீர்கள்.

நான் முதலமைச்சர் - 33 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதனால் எங்களால் மட்டுமே அனைத்தும் செயல்படுகிறது என்று நான் சொல்ல மாட்டேன், சொல்லவும் கூடாது. பலரது சிந்தனையின் கூட்டுச் சேர்க்கைதான் அரசு. அப்படிச் செயல்பட்டால்தான் அது மக்கள் அரசாக இருக்க முடியும். அந்த வகையில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்தக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள், அது ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தின் பலன் கடைக்கோடி மனிதரையும் சேரும்படி செயல்பட வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், திட்டங்களின் செயலாக்கம், நிதிப் பயன்பாடு, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்களை கவனிக்கவும், கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் பயன்பாட்டினை உயர்த்தவும் அதற்காகத் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசினுடைய நோக்கமாக இருக்கிறது.  எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். மருத்துவம், கல்வி, இளைஞர் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர - சிறு -குறு தொழில்கள், நெசவாளர் மற்றும் மீனவர் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோட்டையில் தீட்டப்படக்கூடிய திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. திட்டங்கள் தீட்டுவதை விட முக்கியமானது அந்தத் திட்டங்கள், அதனுடைய பயன்கள், அதனுடைய நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான். அதுதான் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகத் தான் இது போன்ற ஆலோசனைக் குழுக்கள் அவசியமாகிறது.

ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய 41 திட்டங்களை மாநில மற்றும் மாவட்ட அளவிலான திசா கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும். இன்று நாம் ஆய்வுக்கு எடுத்திருக்கக்கூடிய 6 திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் - முதலாவது ஆகும்.  கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்து, தனிநபர் மற்றும் ஊரக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தினுடைய நோக்கம். 2021-22ஆம் ஆண்டில் 80 லட்சம் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, 34 கோடி மனித வேலை சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக நீர் மேலாண்மைப் பணிகளான தடுப்பணை கட்டுதல், பண்ணைக் குட்டை  அமைத்தல் போன்றவற்றுக்காக 6 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், அங்கன்வாடி கட்டடம், ஊராட்சி மன்றக் கட்டடம் போன்ற ஊரக கட்டமைப்புகள் ரூபாய் 2 ஆயிரத்து 786 கோடி  செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ரூபாய் 9 ஆயிரத்து 636 கோடி  செலவில் ஊரக மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

2. ஏழை, எளிய மகளிரைக் கொண்டு சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு நிதி உள்ளிட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, குடும்ப வருமானத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. 2021-2022 ஆம் ஆண்டில் மட்டும் புதியதாக 32ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி அதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

36 ஆயிரத்து 957 புதிய சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இருக்கிறோம்.  20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க திட்டமிட்டு 21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி வங்கிகளின் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறோம்.

திறன் பயிற்சித் திட்டங்கள் மூலமாக 21 ஆயிரத்து 76 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி ரூபாய் 48 கோடியில் வழங்கப்பட்டு, 8 ஆயிரத்து 374 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் 15 ஆயிரத்து 736 பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, 13 ஆயிரத்து 69 மகளிர் வங்கிக் கடன் பெற்று சுயதொழில் செய்கிறார்கள்.

3. இல்லம்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த அரசால் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-22ம்ஆண்டில் ரூபாய் 1,156 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 569 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

4. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய திட்டங்கள்  - ஒன்றிய, மாநில அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தி, சமூக மற்றும் பாலின வேறுபாடுகளைக் களைந்து, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பின்தங்கிய, நலிவடைந்த குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியினை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

2021-22ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கென ரூபாய் 2,664 கோடியே 47 லட்சம் பெறப்பட்டு, முழுவதுமாக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை மூலம் மாணவர் நலனுக்காக ‘நான் முதல்வன்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’, கற்றல் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்த மதிப்பீட்டுப் புலம் போன்ற சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5. உழவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு, வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றிடும் நோக்கத்துடன் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட மதிப்புக் கூட்டுதலுடன் கூடிய உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவது, விவசாயம் சார்ந்த புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட வழிவகுப்பது போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக 2021-22ம் ஆண்டில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளால் 153 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உழவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு “கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை” 2021-22ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இருபது விழுக்காடு ஊராட்சிகளில் தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர் வள ஆதாரங்களை பெருக்குதல் போன்ற முக்கியமான நோக்கங்களை அடைவதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவை தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 634 இளைஞர்களுக்கு ரூபாய் 49 கோடியே 25 லட்சம் செலவில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற தகுதியுடையவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நாம் இப்போது ஆலோசனைகள் செய்ய இருக்கிறோம்.

இந்தத் திட்டங்கள் மட்டுமல்ல - எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய நிறை - குறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்து வந்தாலே, அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறி விடும். கேட்காத கடனும் திரும்ப வராது -போகாத சொந்தமும் திரும்பி வராது என்று கிராமத்தில் சொல்வார்கள்.

அதைப் போலத்தான் ஆய்வுக்கு உட்படுத்தாத எந்தத் திட்டமும் முறையாக செயல்படாது. இதனை துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இது போன்ற ஆய்வுக் கூட்டங்களின் மூலமாக  ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூகநீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்வோம்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டு, என் தலைமை உரையை நிறைவு செய்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: