எனது சட்டப்போராட்டத்திற்கு உதவிகரமாக இருந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி : விடுதலை குறித்து பேரறிவாளன் உருக்கமான பேட்டி!!

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று காலை விடுவித்தது. இதையடுத்து, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர்.இதையடுத்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்று திருக்குறளை மேற்கோள் காட்டி, நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி .எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும். ஒரு சாமானியன் இது போன்ற வழக்கில் உள்ளே மாட்டிக்கொண்டால் அது மிகப் பெரிய துன்பமான சட்டப் போராட்டமாக இருக்கும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில், அவர்களது வாழ்க்கையை திருடுகிறோமோ என்று எண்ணினேன். தாய் தந்தை உயிரோடு இருக்கும்போதே எனது விடுதலையை பார்க்க வேண்டும் என்று கருதினேன்

புறக்கணிப்பு, அவமதிப்பு, அவமரியாதைகளை 31 ஆண்டுகாலம் எதிர்கொண்டார் அற்புதம்மாள். மாக்சிம் கார்க்கியின் ‘தாய் நாவலை 4 முறை படித்துள்ளேன்; அதை படித்தபின் எனது தாயாரை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். எனது உறவினர்கள் பலம், அன்பு பாசம்தான் என்னை இங்கே நிறுத்தி உள்ளது.எங்களுடைய சட்டப்போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை தங்கை செங்கொடி மரணம்தான்.உலகத் தமிழர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தனர். எதிர்காலம் குறித்து உறவினர்கள், நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். எனது சட்டப்போராட்டத்திற்கு உதவிகரமாக இருந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி,என்றார்.

Related Stories: