பேரறிவாளன் விடுதலை!: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் மிகவும் சிறப்புடன் என்றென்றும் பாராட்டப்படும் முக்கியத் தீர்ப்பு..கி.வீரமணி ட்வீட்..!!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து தி.க.தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேரறிவாளனை விடுதலை உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு.

இன்று வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் மிகவும் சிறப்புடன் என்றென்றும் பாராட்டப்படும் முக்கியத் தீர்ப்பு. மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத ஓர் அருமையான நல்ல தீர்ப்பு. அரசமைப்புச் சட்ட அமைப்பின் மீது வெகுமக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் பெருத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனிதநேயம் பொங்கும் தீர்ப்பு இது. ஆளுநர்கள் அவர்களை இயக்கும் அதிகார வர்க்கம் அரசமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாக செயல்படவேண்டும் என்ற பாடத்தை, அதை மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திடும் அருமையான அரசமைப்புச் சட்டத்திற்கான விளக்கத்தைத் தந்துள்ள தீர்ப்பு இது.

இதில் இறுதிவரை உறுதியாக இருந்த தமிழ்நாடு அரசும், குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் பாராட்டு மட்டுமல்ல இத்தீர்ப்பு; அரசமைப்புச் சட்டம் யாரால் சரியாகப் பின்பற்றப்படுகிறது? காப்பாற்றப்படுகிறது? என்ற பேருண்மையை அகில உலகிற்கும் அறிவிக்கும் தீர்ப்பும் ஆகும். இதற்காக பாடுபட்ட வழக்குரைஞர்கள், கட்சித் தலைவர்கள், நியாயத்தின்பாற் நின்ற மனித உரிமைப் போராளிகள் அனைவருக்கும் நமது நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்சநீதிமன்ற அமர்வு நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு நமது பாராட்டுகள். பேரறிவாளனின் வெற்றி, நியாயத்தின், நேர்மையின் வெற்றி. எதிர்பார்க்கப்பட்ட இந்த நல்ல தீர்ப்பைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; நியாயம், நீதி வெற்றி பெற்றதுகண்டு நல்லுள்ளங்கள் பெருமகிழ்ச்சிக்கு அளவில்லை. மகிழ்கிறோம் - வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: