×

19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 50வது வயதில் விடுதலையானார். 30 ஆண்டுகள் இவ்வழக்கு கடந்து வந்த பாதை...

*1991-ம் ஆண்டு மே, 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, நளினி-முருகன் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு ஜூலை 22-ம் தேதி சாந்தன் கைது செய்யப்பட்டார்.

*1998 : இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, 1998 ஜனவரி 28-ம் தேதி 26 பேருக்குத் தூக்குத் தண்டனை அளித்து பூந்தமல்லி தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் 19 பேர் விடுவிக்கப்பட்டதுடன், 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதியானது. மற்ற மூன்றுபேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

*1999 அக்டோபர் 8-ம் தேதி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே மாதம் 10-ம் தேதி நான்கு பேரும் அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமாதேவிக்கு கருணை மனு அனுப்பினர்.

*1999 அக்டோபர் 29-ம் தேதி அந்த கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 25-ம் தேதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து, அமைச்சரவை முடிவின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு விதிக்கப்பட்டது.

*2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பெண் குற்றவாளி என்று கருத்தில் கொண்டு நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூவரும் ஏப்ரல் 26-ம் தேதி குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.

*2008-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி  நளினியைச் சந்திக்க, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்றிருந்தார். இந்த சந்திப்பு அந்நாட்களில் பெரிதும் பேசப்பட்டது. இது குறித்து நளினி எழுதிய சுயசரிதையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

*அதன்பின், 2000-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு, மீதான தீர்ப்பு 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த முறையும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

*2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நீதிபதி சதாசிவன் தலைமையிலான மூன்றுபேர் கொண்ட அமர்வு, தூக்கு தண்டனையை ரத்து செய்தது. அடுத்த நாளே அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலை தொடர்பாகச் சிறையில் இருக்கும், 7 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று அறிவித்தார்.

*2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நீதிபதி இப்ராகிம் கல்புல்லா, “மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், மாநில அரசு இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கினார். 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி 7 பேரையும் விடுவிக்க கோரி, மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

*2017 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

*2018-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி 7 பேரின் விடுதலை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், “தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் 161-வது விதியை மேற்கோள்காட்டி, உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அதிகாரத்தை உறுதி செய்தது.

*2018-ம்  ஏப்ரல் மாதம் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது.2018 செப்டம்பரில் அதிமுக ஆட்சியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

*2021 ஜூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் , தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்யவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

*தீர்மானம் மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.

*அதே சமயம் குற்றமே நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக் கோரி கடந்த 2020ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 10 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

*பேரறிவாளன் விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற வாதத்திற்கு இடையே அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்று கேட்ட நீதிபதிகள், நீதிமன்றமே விடுதலை செய்ய நேரிடும் என்று கூறினர்.

*2022ம் ஆண்டு மே 18ம் தேதி பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



Tags : Prime Minister, Rajiv Gandhi, Assassination, Perarivalan, Liberation, Supreme Court
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்