தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.

36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டது.  தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது. இன்னும் 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்திருந்தார்.

கடைசி கட்ட விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை ஒரு நபர் ஆணையம் சமர்ப்பித்தது.

Related Stories: