இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

கொழும்பு : இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு தீர்ந்ததை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் கையிருப்பு இல்லாததால் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் 4 லட்சம் டன் டீசல் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிலையில் அங்குள்ள பெரும்பாலான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்துடன் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா அனுப்பிய டீசல் இலங்கைக்கு வந்து சேர ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல்கள் அங்கு வாகன ஓட்டிகளை கவலை அடையச் செய்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடால் அங்கு பொருளாதார அதளபாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு உதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இலங்கை செல்கிறது. இதனை சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

Related Stories: