நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்தபடியே கொள்ளையரை விரட்டிய வக்கீல்: திண்டுக்கல் வீட்டிற்குள் புகுந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் புகுந்து திருட வந்த கொள்ளையர்களை அமெரிக்காவில் இருந்தபடி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வக்கீல் ஒருவர் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திண்டுக்கல், எம்விஎம் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லீனஸ். வக்கீல். மனைவி பெக்கி கோமஸ். சுகாதாரத்துறை இணை இயக்குநர். இவர்களது மகள் டெலிசியா மேரி அமெரிக்காவில் வசித்து வருகிறார். லீனஸ், மனைவியுடன் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள மகளை பார்க்க சென்றுள்ளார். பல நாட்களாக பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

முன்னதாக, கொள்ளையர்கள் வீட்டு வாசலில் நின்றபோது, வீடு முழுவதும் பொருத்தியிருந்த அதிநவீன கேமரா சென்சார் மூலம் அமெரிக்காவில் உள்ள அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து லீனஸ் அமெரிக்காவில் இருந்தபடி, தனது செல்போன் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டின் மின்விளக்குகள் அனைத்தையும் உடனடியாக எரிய செய்துள்ளார். ஆளில்லாத வீட்டில் திடீரென விளக்குகள் எரிந்ததால், கொள்ளையர்கள் ஒரு நிமிடம் தடுமாறிப் போனார்கள். ஆனாலும், முயற்சியை கைவிடவில்லை.

இதையடுத்து அங்குள்ள ஒரு ஸ்பீக்கர் மூலம் லீனஸ், போலீசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார். பயந்து போன கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். லீனஸ் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் வீட்டை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அமெரிக்காவில் இருந்தபடியே ஸ்பீக்கரில், லீனஸ் நடந்தவற்றை அனைவருக்கும் விளக்கினார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

Related Stories: