நிலக்கோட்டை அருகே மீன் விற்ற தகராறு கிராமத்தில் புகுந்து கூலிப்படை தாக்குதல்: பெட்ரோல் குண்டு வீச்சு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே மீன் விற்ற தகராறில் நள்ளிரவில் கிராமத்தில் கூலிப்படை புகுந்து தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கந்தப்பக்கோட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் காலை பள்ளப்பட்டியைச் சேர்ந்த சத்திரியன் (22), அவரது தம்பி ஆதித்யா (20) உள்ளிட்ட 3 பேர் மினிவேனில் மீன் விற்பனை செய்தனர். இவர்கள் சாலை நடுவே வேனை நிறுத்தி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கும், டூவீலரில் வந்த 2 இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மூவரும் சேர்ந்து, இளைஞர்களை கடுமையாக தாக்கி, டூவீலர்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கந்தப்பகோட்டை கிராம மக்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்து வைத்தனர். இதற்கிடையில் கந்தப்பக்கோட்டை இளைஞர்கள் சிலர், மீன் விற்றவர்களின் மினிவேனை அடித்து நொறுக்கினர்.

இதனால் ஆத்திரமுற்ற சத்திரியனும், ஆதித்யாவும் மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வரவைத்து உருட்டுக்கட்டை, பட்டாக்கத்தி, அரிவாளுடன் கந்தப்பக்கோட்டை கிராமத்தில் புகுந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ, டூவீலர்களை அடித்து நொறுக்கினர். 5 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீடுகளிலிருந்து அலறியடித்து வந்த பொதுமக்களை அரிவாள், கத்தியால் விரட்டி, விரட்டி வெட்டினர்.

இதில், கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (21), முத்துக்குமார் (24), விக்னேஷ் (25) உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைகளில் ேசர்க்கப்பட்டனர். அந்தக் கும்பல் ஆடு, மாடுகளையும் வெட்டிவிட்டு தப்பினர். திண்டுக்கல் தேனி சரக காவல்துறை டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் ஆகியோர் கிராமத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஆதித்யா, சத்திரியன் மற்றும் அவர்களது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: