நெல்லை அருகே கல்குவாரியில் 2 பேர் பலி பாறையில் சிக்கிய மேலும் இருவரை மீட்கும் பணி நீடிப்பு: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்; முதல்வர் உத்தரவு

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து, 2 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்டனர்.  மேலும் இருவரை மீட்கும் பணி தொடர்கிறது. நெல்லை, பாளையங்கோட்டை அருகே முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு ராட்சத பாறை உருண்டு 6 பேர் சிக்கி கொண்டனர். இதில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன், விஜயன் ஆகிய 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடையன்குளத்தை சேர்ந்த டிரைவர் செல்வம், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 30 பேர் கடந்த 3 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 40 ஆயிரம் டன் எடை உள்ள 2 பெரிய பாறைகள் உள்ளே விழுந்து கிடப்பதால் அவற்றை அகற்றுவது சவாலாக விளங்குகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கயிறு கட்டி பாறைகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த  முருகனின் சடலத்தை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள ராஜேந்திரன், செல்வக்குமார் ஆகிய 2 பேரை தேடும் பணி தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று பகலில் பாறை இடிபாடுகளுக்கு மத்தியில் மற்றொரு நபரின் உடல் தென்பட்டது. அவரையும், லாரிக்குள் சிக்கியுள்ள மற்றொருவரையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

முதல்வர் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கல் குவாரி விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன்(23), நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வன்(25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: