பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்,’ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தது.

இதன்படி, தமிழக அரசு நேற்று தனது எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதோடு, அது தொடர்பான முடிவுக்காக தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், 432 (7) சிஆர்பிசி சட்டத்தின் அடிப்படையில் யாருக்கு அதிகாரம் என்பது பிரித்து வரையறுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக விசாரணை எல்லையில் வழக்கு உள்ளதால், முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. மேலும், சி.ஆர்.பி.சி அல்லது ஐ.பி.சி ஆகியவை அரசியலமைப்பு  பிரிவு 72 மற்றும் 161ன் கீழ்வுள்ள தனிப்பட்ட சட்டமானது ஜனாதிபதி, ஆளுநரின் அதிகாரத்தை பாதிக்காது என்று உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த விவகாரம் முடித்தும் வைக்கப்பட்டு விட்டது. எனவே, ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை.

மேலும், ஐ.பி.சி 302 போன்ற பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் பொது மன்னிப்பு, தண்டனை குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று ஒன்றிய அரசு வாதிட்டது.  அந்த வாதத்தை ஏற்றால் கடந்த 72 ஆண்டுகளாக ஆளுநர் தனது சிறப்பு அதிகாரமான 161 சட்டத்தை பயன்படுத்தி வழங்கிய தண்டனை குறைப்பு உள்ளிட்ட அனைத்தும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆகிவிடும்.  அதனால், ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்து விட்டு, ஏற்கனவே நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். அதனால், இதனை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்றுகாலை தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: