5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

 புதுடெல்லி: உத்தரகாண்ட்,  இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், கன்வீல்கர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள விபின் சங்கி, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அம்ஜத் சயீத் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கும்படியும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மின் எம் சாயா கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தெலங்கானா உயர்  நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயன், இதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும்படியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது தெலங்கானா தலைமை நீதிபதியாக உள்ள சதீஷ் சந்திர சர்மா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்படுகிறார்.

Related Stories: