பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் கன்னட நடிகை பலி

பெங்களூரு: பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை சேத்தனா ராஜ், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். கன்னட டி.வி மற்றும் திரைப்பட நடிகை சேத்தனா ராஜ் (21), பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, திடீரென்று அவரது நுரையீரலில் நீர் தேங்கியதால், உடனே அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சேத்தனா ராஜ் மரணம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு அவரது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும், அவர் தனது நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நடிகையின் பெற்றோர், தங்கள் மகளின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறுகின்றனர். சரியான மருத்துவ உபகரணங்களோ அல்லது பெற்றோரின் அனுமதியோ இல்லாமல் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சேத்தனா ராஜின் தந்தை புகார் கூறினார். தற்போது இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றுள்ளதால், சேத்தனா ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமய்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories: