ரூ.3.3 லட்சம் கோடி விலை தர முடியாது டிவிட்டரில் 20% போலி கணக்கு: புது குண்டை தூக்கிப் போட்ட எலான் மஸ்க்

லண்டன்:உலகின் நம்பர்-1 பணக்காரரான, அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கப் போவதாக அறிவித்தார். ரூ.3.3 லட்சம் கோடியில் டிவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் உறுதியாகி விட்டதாக கூறினார். டிவிட்டர் நிர்வாகமும் மஸ்க்கின் விலை பேரத்தை ஏற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்காக, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணம் திரட்டும் முயற்சியிலும் மஸ்க் இறங்கினார்.

ஆனால், கடந்த 13ம் தேதி திடீரென டிவிட்டரை வாங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மஸ்க் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகம் கூறியபடி, டிவிட்டரில் 5 சதவீதத்திற்கு குறைவான போலி கணக்குகள் மட்டுமே இருக்கிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். இது தொடர்பாக மியாமி டெக்னாலஜி மாநாட்டில் பேசிய மஸ்க், ‘டிவிட்டரில் 22.9 கோடி கணக்குகள் உள்ளன. அதில் 20 சதவீதம் போலி கணக்குகள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளேன்,’ என்றார். இதற்கு பதிலளித்து டிவிட்டர் சிஇஓ பராஜ் அகர்வால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டிவிட்டருக்கு வெளியில் இருக்கும் நபர்களால் உண்மையான போலி கணக்குகளை கண்டு பிடிக்க முடியாது,’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,மஸ்க் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘டிவிட்டர் நிர்வாகம் சொல்வதை விட 4 மடங்கு அதிகமாக 20 சதவீத போலி கணக்குகள் உள்ளன. இது மிகவும் அதிகம். டிவிட்டர் நிர்வாகம் தரும் துல்லியமான மதிப்பீட்டின் படியே எனது விலையும் இருக்கும். 5 சதவீதத்திற்கு கீழ் போலி கணக்குகள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் டிவிட்டர் சிஇஓ வெளியிடவில்லை. அவர் வெளியிடாத வரை, டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் இதற்கு மேல் நகராது,’ என அதிரடியாக அறிவித்துள்ளார்.

Related Stories: