மரியுபோல் தொழிற்சாலையில் பதுக்கி சண்டை 260 உக்ரைன் வீரர்கள் பலத்த காயத்துடன் சரண்: ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

கீவ்: மரியுபோல் தொழிற்சாலையில் பதுக்கி ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்ட 260க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலத்த காயத்துடன் ரஷ்ய படையிடம் சரணடைந்தனர். ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதமாக தொடரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய படைகள், நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இருப்பினும், துறைமுக நகரமான மரியுபோல், கருங்கடல் பகுதியில் உள்ள ஒடேசா நகரம், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் ஆகிய பகுதிகளில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. டான்பாஸ் பகுதியில் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தது. சீவியர்டோனெட்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் நடந்த குண்டு வீச்சில் 19 பேர் கொல்லப்பட்டனர். லிலிவ் நகர், யாவோரிவ் மாவட்டத்தில் உள்ள உக்ரைன் ராணுவ உள்கட்டமைப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.   

இந்நிலையில், மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி, ரஷ்ய படையுடன் சண்டையிட்டு வந்த உக்ரைன் வீரர்கள் 260க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ரஷ்ய படைகளிடம் சரணடைந்தனர்.இவர்களின் உயிரை காப்பாற்ற, ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள நோவோசோவ்ஸ்கி மருத்துவமனையிலும், ஒலெனிவ்காவில் உள்ள மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிற்சாலையில் சிக்கியுள்ள உக்ரைன் வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘உங்களைப் போன்ற அனைத்து வீரர்களுக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். உக்ரைன் ஹீரோக்கள் உயிருடன் இருக்க வேண்டும். இது எங்கள் கொள்கை. பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்து வருகிறது. வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான பணி தொடர்கிறது. அதற்கு நேரம் தேவை’ என்றார்.

* நேட்டோவில் இணைய சுவீடன் கையெழுத்து

நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து, சுவீடன் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், நேட்டோவில் சேருவதற்கான பணிகளில் பின்லாந்து முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பித்தை இந்த வாரத்தில் நேட்டோ தலைமையகத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில், நேட்டோவில் சேருவதற்கான முறையான விண்ணப்பத்தில் சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன் லிண்டே நேற்று கையெழுத்திட்டார்.

Related Stories: