அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, க.சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அரையப்பாக்கம் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்த நெல்லை இடைத்தரகர்கள் இல்லாமல், அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களின், கோரிக்கையை ஏற்று  விவசாயிகள் பயன்பெறும் வகையில் அக்கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையொட்டி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் பத்மப்ரியா நந்தகோபால் முன்னிலை வகித்தார். கொள்முதல் நிலைய அலுவலர் ஏழுமலை வரவேற்றார்.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய செயலாளர்கள் சத்யசாய், பொன்.சிவக்குமார், திமுக நிர்வாகிகள் சுந்தரவரதன், ஆறுமுகம், தனசேகரன், கோபி, கினார் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏறுப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் திறந்து வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories: