ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புவதில் தவறில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கவுன்சலிங் மூலம் நிரப்பப்படாமல் காலியாக இருந்த இடங்களை சில தனியார் மருத்துவ கல்லூரிகள் தாமாக முன்வந்து நிரப்பின. இதனை ஏற்க மறுத்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் கவுன்சிலிங் இன்றி சேர்க்கப்பட்ட மாணவர் இடங்கள் சட்டவிரோதம் என்று தெரிவித்தது.  இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. மனுவில், கலந்தாய்வு மற்றும் மறு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்புக்கு மட்டுமே பொருந்தும். ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது. மேலும் இந்த விவகாரத்தில் கல்லூரிகள் தங்களது எல்லைக்குட்பட்டே செயல்பட்டுள்ளன. எனவே, மாணவர் சேர்க்கை செல்லும். வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு மாணவர்களை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Related Stories: