நெசவாளர்களின் இன்னல்களை நீக்க அரசு தொடர் நடவடிக்கை; நிர்மலா சீதாராமனுடன் இன்று திமுக நாடாளுமன்ற குழு சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உயர்ந்து வரும் பருத்திவிலை உயர்வை தடுக்கக்கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்  பியூஷ் கோயல் ஆகியோரை திமுக நாடாளுமன்ற குழு இன்று சந்திக்கிறது. பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும் அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையை விரிவாகச் சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும், நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும்’ மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் மிக முக்கியமாக தொழில்துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிப்பதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து நெசவாளர்கள் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்  என்று நேரில் வலியுறுத்துமாறு திமுக நாடாளுமன்ற குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அந்தவகையில், திமுக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் ஆகியோரை இன்று சந்திக்கின்றனர். இதேபோல், நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒன்றிய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: