உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்வு

சென்னை: உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் கடும்போரினால், கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை அதிகரிப்பால், வியாபாரம் சரிவர நடைப்பெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.  சென்னை கோயம்பேடு உணவு தானியம் மார்க்கெட்டில், ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.70 அதிகரித்து, ரூ.190க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பாமாயில் ரூ.110லிருந்து ரூ.152க்கும், கடலை எண்ணெய் ரூ.140லிருந்து ரூ.182க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிலோ நல்லெண்ணெய் ரூ.240லிருந்து, ரூ.280க்கும், ஒரு கிலோ டால்டா ரூ.120லிருந்து ரூ.160க்கும் விற்பனையாகிறது. இந்த விலை அதிகரிப்பு குறித்து, உணவு தானிய வணிகர்கள் சங்க பொருளாளர் அருண்குமார் கூறுகையில், ‘‘உக்ரைன், ரஷ்யா இடையே போர் மூன்று மாதமாக  தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இவ்விலை உயர்வால்,  வியாபாரம்  சரியாக நடைப்பெறவில்லை. எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: