அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் The Dalit Truth புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: இந்த புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்  புத்தகத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த  கே.ராஜூ உருவாக்கி இருக்கிறார். திமுகவை பொறுத்தவரைக்கும், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதிகளைத்  தமிழ்நாடு அளவில் நிறைவேற்றி இருக்கக்கூடிய கட்சி.அவர்களுடைய சமூகநீதிக்காகவும், ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போராடியும் அதற்காகப் பல்வேறு தியாகங்களையும் செய்திருக்கக்கூடிய இயக்கம்தான் இந்த இயக்கம்.

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் எனச் சமூகத்தின்  அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும். நம் நாடு வளர, நம் மாநிலம் வளர வேண்டும். நம் மாநில வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தாக வேண்டும். நம் மாவட்டங்கள் வளர, ஒவ்வொரு கிராமமும் சமூக நீதிப் பூங்காவாக, சமத்துவப் பூங்காவாக மாற வேண்டும். அப்போதுதான் உலகத்தினுடைய நம்பர் ஒன் வல்லரசாக, அதற்கும் மேலாக ஒரு நல்லரசாக இந்தியா மாறும் என்று கூறி, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, புத்தகத்தினுடைய தொகுப்பாசிரியர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ராஜூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக சட்டமன்றக் கட்சித் தலைவர் சிந்தனைச்செல்வன், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயாலாளர் அப்துல் சமத்,சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: