நாகர்கோவிலில் புதுப்பொலிவு பெறும் மாநகராட்சி பூங்கா: விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்க திட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் புதிதாக 8 இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் நாகர்கோவில், வேப்பமூடு பகுதியில் உள்ள சர்.சி.பி ராமசாமி ஐயர் நினைவு பூங்காவும் மேம்படுத்தப்பட உள்ளது.  ரூ.1 கோடி செலவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், வேப்பமூடு பூங்காவில் ஆய்வு செய்தார். பூங்காவில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட அவர், பொழுதுபோக்கும் வகையில் சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது வேப்பமூடு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் ஒரு கட்டமாக பூங்காவில் உள்ள டைனோசர் சிலையின் வண்ணமும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த திறந்தவெளி திரையரங்கு பகுதியாக இருந்த சுவரில், செல்பி எடுத்தும் மகிழும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு வரும் பெரியவர்கள், குழந்தைகள் இந்த ஓவியங்கள் முன் நின்று செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். மேலும் நாகர்கோவில் பூங்காவில் உள்ள மிக் 21 ரக விமானமும் புதுப்பிக்கப்பட உள்ளது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், அதிகளவில் பொதுமக்கள் பூங்காவுக்கு வருவார்கள் என்பதால் அதற்கேற்ப வசதிகளை உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்கப்படும் வகையில் திட்டங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Related Stories: