திருவையாறில் சப்தஸ்தான விழா ஏழூர் சாமி பல்லக்கு வீதியுலா கோலாகலம்: இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி ஏழூர் சுவாமி பல்லக்கு வீதியுலா இன்று காலை நடைபெற்றது. இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 9ம் தேதி நடந்த தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியில் 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. 13ம் தேதி தேரோட்டம் நடந்தது. அன்று காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் வந்தார்.

அதை தொடர்ந்து முக்கிய விழாவான சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், திருமழபாடி நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அந்தந்த கோயில் சாமிகளுடன் இரவு காவிரி ஆற்றில் 7 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது.

இன்று (17ம் தேதி) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்தது. இரவு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: