×

கப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி அலகுகள் மூலம் நாள்தோறும் சுமார் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த அனல்மின் நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று ஓரளவிற்கு பலமாக வீசி வருகிறது. இதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் குறையவில்லை.

தமிழகத்தில் அதிகரித்துள்ள காற்றின் வேகம் மற்றும் வெயில் சூழல் காரணமாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக அதிகளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. மேலும் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான மின் தேவையும் குறைந்துள்ளது. இதையடுத்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்துள்ளது. மின்தேவை குறைந்துள்ள நிலையில், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலமான மின் உற்பத்தி அதிகமாகி இருப்பதால்  தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலுள்ள 5 அலகுகளிலும் கடந்த 14ம்தேதி இரவு முதல் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்நிலையில் மீண்டும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் அனல் மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதால், சுமார் ஒரு லட்சம் டன் நிலக்கரி அனல்மின் நிலையத்தில் தற்போது கையிருப்பு உள்ளதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Thuthukudi Thermal Power Station , Coal to be brought by ship: Power generation resumes at 5 sections at Thoothukudi Thermal Power Station ..!
× RELATED தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2...