தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு

அமிர்தசரஸ்: குறிப்பிட்ட சமூகத்தினரின் தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகை பாரதி சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகை பாரதி சிங், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட  நிகழ்ச்சி ஒன்றில், சீக்கியர்களின் தாடி - மீசை குறித்து சர்ச்சைக்குரிய  வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  அமிர்தசரஸ் சீக்கிய அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தன. அதையடுத்து பாரதி சிங் மீது ஐபிசியின் 295-ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பாரதி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.

அந்த வீடியோவில், ‘என்னுடைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது; குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தாடி வைத்திருக்கிறார்கள். அதுதான் பிரச்னை என்று எந்த மதத்தையும், எந்த ஜாதியையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. நகைச்சுவையுடன் பொதுவாகதான் பேசினேன். நான் சொன்ன கருத்துகள் எந்த மதத்தினரையாவது காயப்படுத்தியிருந்தால், கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நானே ஒரு பஞ்சாபிதான். அமிர்தசரஸில் பிறந்தேன். பஞ்சாபின் மாண்பை காப்பேன்; பஞ்சாபி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: