கட்சியை கபளீகரம் செய்யும் பாஜக கிராமம் கிராமமாக செல்ல எடப்பாடி முடிவு

சென்னை: கட்சியின் நிர்வாகிகளை கொஞ்சம், கொஞ்சமாக தன் பக்கம் பாஜக இழுத்து வரும் நிலையில் கட்சியை பலப்படுத்த கிராமம் கிராமமாக செல்ல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். அதிமுகவில் தற்போது உள்கட்சித் தேர்தல்கள் முடிந்துள்ளன. ஏற்கனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு இணை ஒருங்கிணைப்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் பதவி வரை தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரு நாட்களாக சேலத்தில் தனது வீட்டில் முகாமிட்டுள்ளார். அவரது பிறந்த நாள் முதல் அங்கு தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்ல வரும் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது கட்சியைப் பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், ராஜ்யசபா எம்பிக்களாக யாரை அறிவிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதோடு நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் கல்குவாரி விபத்து, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அவர் அதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திரமோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது அவரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு அதற்காக அனுமதி கேட்டுள்ளார்.

Related Stories: