டிரான்ஸ்பார்மரை வயர்மேன் இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே உயிரிழந்த மின்ஊழியர்: கோபி அருகே பரபரப்பு

கோபி: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பி.கே.புதூரை சேர்ந்தவர் முத்து மகன் விஸ்வநாதன் (32). கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொங்கர்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்த சடையப்பன் மனைவி பாப்பாத்தி என்பவரது வீட்டிற்கு, மின்கம்பத்தில் இருந்து வீடுவரை உள்ள மின்சார வயர்கள் முழுமையாக பழுதடைந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து, நேற்று கொங்கர்பாளையம் பகுதி மின்வாரிய வயர்மேன் சக்திவேல் (43), ஒப்பந்த ஊழியர் விசுவநாதனை அழைத்து கொண்டு பாப்பாத்தி வீட்டிற்கு வந்தார். டிரான்ஸ்பார்மரில் மின்இணைப்பை துண்டித்துவிட்டு கம்பத்தில் இருந்து வீடு வரை உள்ள வயரை மாற்றினர்.

இறுதியாக கம்பத்தில் இணைப்பை சரி செய்தார் விசுவநாதன். இணைப்பை சரி செய்த உடனே இறங்கிவிடு என்று கூறிவிட்டு சக்திவேல் டிரான்ஸ்பார்மரை இயக்க சென்றுவிட்டார். விஸ்வநாதன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கி விட்டதாக நினைத்த சக்திவேல், டிரான்ஸ்பார்மரை ஆன் செய்தார். அப்போது கம்பத்தில் இருந்த விசுவநாதன் மீது மின்சாரம் பாய்ந்து கம்பியில் சாய்ந்தார். இதைப்பார்த்த பாப்பாத்தி அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வயர்மேன் சக்திவேலிடம் கூறினர். அவர் உடனே மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் கம்பத்தில் ஏறி பார்த்தபோது விசுவநாதன் கம்பத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வயர்மேன் சக்திவேலை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: