கொழுப்பைக் குறைக்க பிளாஸ்டிக் சர்சஜி செய்த கன்னட நடிகை உயிரிழப்பு: 21 வயது இளம் நடிகை சேத்னா ராஜ் மரணத்தில் சர்ச்சை

பெங்களூரு: பெங்களுருவில் கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த 21 வயது இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கவனக்குறைவால் தனது மகள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கன்னட திரை உலகில் ஓரளவுக்கு நன்கு அறியப்பட்டவர் 21 வயது இளம் நடிகை சேத்னா ராஜ். இவர் நேற்று காலை தனது நண்பருடன் பெங்களுருவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு ரகசியமாக சென்று சேர்ந்துள்ளார். உடலில் உள்ள கொழுப்பை கரைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யவே அவர் சென்றதாக கூறப்படுகிறது.

நடிகை சேத்னாவுக்கு உடனடியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை மருத்துவ குழுவினர் மேற்கொண்டதாக தெரிகிறது. மாலையில் அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இது பற்றி தகவலறிந்த சேத்னாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் மருத்துவமனைக்கு வந்ததே தெரியாது என கூறும் அவர்கள், மருத்துவர்களின் கவனக்குறைவே தனது மகள் உயிரிழந்ததற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். அது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை சேத்னாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து நடிகையின் உடல் ராமையா மருத்துவமனைக்கு உடற்கூறாய்வக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நடிகையின் முகத்தில் லேசான மாற்றம் செய்யவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் அது உயிரிழப்பில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இது அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: