ஊட்டியில் கனமழை சேறும் சகதியுமாக மாறிய தாவரவியல் பூங்கா: சுற்றுலா பயணிகள் கடும் அவதி

ஊட்டி: ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் அரசு தாவரவியல் பூங்கா சேறும், சகதியுமாக மாறியது. சுற்றுலா பயணிகள் அமர இடமில்லாமல் அவதிப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் எந்நேரமும் குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. நேற்றும் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால், ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலேயே கடுங்குளிர் நிலவியது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். பிற்பகலுக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. கன மழையால் சிறிது நேரம் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழையால் தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், சுற்றுலா பயணிகள் அமருவதற்குகூட இடமின்றி தவித்தனர்.

அரசு தாவரவில் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பிரெஞ்ச் மேரிகோல்டு, இன்கா மேரிகோல், சால்வியா, பிகோனியா, லில்லியம், கேலண்டுள்ளா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி நடக்காத போதிலும், பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. இது தவிர 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. இந்நிலையில், நாள்தோறும் பெய்து வரும் மழையால், பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பூத்துள்ள மலர்கள் அனைத்தும் அழுகி உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்காமல் இருக்க தற்போது பூங்காவில் மலர் செடிகளை பிளாஸ்டிக் போர்வை கொண்டு ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories: