திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் விஜிலென்ஸ் ரெய்டு பொது மேலாளர், பொறியாளரிடம் 2வது நாளாக விசாரணை: ரூ. 3 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2வது நாளாக இன்று பொது மேலாளர், பொறியாளரிடம் விசாரணை நடந்தது. திருச்சி ராஜா காலனியில் மாவட்ட தொழில் மையம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொழில் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொழில் மையம் மூலம் பெறப்பட்ட வங்கி கடனுக்கு சுமார் 25 சதவீதம் வரை மானியம் கிடைக்கும்.

இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் தொழில் மைய மேலாளர் லஞ்சம் வசூலித்து வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் பேரில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் தொழில் மையத்துக்கு திடீரென வந்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன் (45), பொறியாளர் கம்பன் (40) ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் அவர்களது அறைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, ரொக்கம், ஆவணங்களை போலீசார் கைப்பற்றி பொது மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோரிடம் 2 மணி நேரம் தொடர்ந்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று மீண்டும் 2 மணி நேரம் விசாரித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இது, இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் ரூ.6 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை, ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகம் இருந்தது. ஆனால் இங்கு எதையும் பறிமுதல் செய்யவில்லை. இதேபோல் திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள பொறியாளர் கம்பனின் வீட்டிலும் சோதனை நடந்தது. எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இரவு இருவரையும் போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இருவரையும் தொழில் மையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். ரவீந்திரனின் வங்கி லாக்கர் சாவியை போலீசார் கைப்பற்றினர். அலுவலகத்தில் விசாரணை முடிந்தவுடன், ரவீந்திரனை வங்கிக்கு அழைத்து சென்று அவரது லாக்கரை திறந்து சோதனை செய்ய உள்ளனர். இந்நிலையில் 2 பேர் மீதும் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு முறையான விளக்கம் இல்லை என்றால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: