கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு பெற்றோரின் நோக்கமும் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்பதே. இதில் ஆங்கில வழிக் கல்வி என்பது கல்வியே கிடையாது. ஒருவர் ஆங்கில வழிக் கல்வியில் தன் குழந்தையை சேர்த்துள்ளார் என்றால் மீடியம் என்பதற்கு அவருக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் என பேசத் தொடங்கிய வெ.பி.வினோத்குமார், ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ எனும் ஆவணப்படத்தின் இயக்குநர். ‘மக்கள் திரை’ எனும் யு-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். கூடவே தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி கொடுப்பது அறிவியல் பூர்வமானதா? அவர்களை அது முன்னேற்றுமா? என்பதை ஆவணப்படத்தில் பொதுமக்கள் முன்பு கேள்வியாக வைத்து, ஆங்கில வழிக் கல்வியில் ஏற்படும் பாதகங்களை கல்வியாளர்கள் வழியாகவும், பல்வேறு தரவுகள், ஆய்வுகள் மூலம் காணொளி வழியே மிகவும் சிறப்பாக விளக்கி இருக்கிறார்.

* 1978ல் தமிழகத்தில் வெறும் 34 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தது.

* 1980 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்தான் படித்தார்கள்.

* 2012-13ல் மாவட்டத்துக்கு 10 பள்ளி வீதம் ஆங்கில வழிக் கல்வி செயல்பட்டது.

* 2014-15 கல்வி ஆண்டில் 6594 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை ஜெயலலிதா அரசு தொடங்கியது.

பிரெஞ்சு மொழி கற்க பிரெஞ்சு வகுப்பும், ஜெர்மன் மொழி கற்க ஜெர்மன் வகுப்பும், ஹிந்தி மொழி கற்க ஹிந்தி வகுப்பும் என்றால் ஆங்கில மொழி கற்க ஆங்கில வகுப்பு மட்டும் போதுமே. எதற்காக ஆங்கில வழிக் கல்வி..? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து ஆரம்பிக்கும் காணொளியில், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் ஆவணப் படம் பேசிச் செல்கிறது. ஆவணப்படம் குறித்தும்.. ஆங்கில வழிக் கல்வி மோகம் குறித்தும் அவரிடம் பேசியபோது...

ஒரு குழந்தை மொழியைக் கற்பது பள்ளியில் அல்ல. தாயின் வயிற்றில். வயிற்றில் கருவாக இருக்கும்போதே தன் தாய் மொழியை குழந்தை கேட்கத் துவங்குகிறது. அம்மாவும் அம்மாவைச் சுற்றி இருப்பவர்களும் பேசும் மொழியே குழந்தைக்கு தாய் மொழி. மொழியை ஆசிரியர் கற்றுத் தரும் முன்பே வீடு, சுற்றம், நட்பு, தான் வசிக்கும் தெரு எனத் தன் தாய் மொழியைக் குழந்தை கற்பதால், பள்ளி செல்லும் முன்பே தன் தாய் மொழியை நன்றாகப் பேசவும் கேட்கவும் குழந்தைக்குத் தெரியும். ஆனால் எழுத்து தெரியாது.

பள்ளி செல்லும் குழந்தைக்கு அதன் தாய் மொழியில் எழுத்தை எழுதக் கற்றுத் தருகிறோம். 5 வயது முதல் 10 வயது வரை குழந்தை தனது தாய் மொழியில் எழுதப் படிக்கக் கற்பதுதான் தொடக்கக் கல்வி. தாய் மொழி வழியாகவே அறிவியல், கணக்கு, வரலாறு, சமூக அறிவியல் என பிற பாடங்களையும் குழந்தை சிறப்பாகக் கற்க முடியும்.

ஒரு குழந்தை தாய்மொழியைக் கற்பதற்கு முன்பே அந்நிய மொழியைக் கற்பது போன்ற பைத்தியக்காரத்தனம் உலகில் வேறு எங்கும் இல்லை. தாய் மொழியின் இலக்கணத்தை உணராமல் வேற்று மொழியான ஆங்கிலத்தைப் படித்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் குழந்தை தடுமாறும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தரமான ஆங்கில வழிக் கல்வி இருக்கலாம். ஏனெனில் அவர்களின் தாய் மொழி ஆங்கிலம். ஆனால் சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் அவரவர் தாய்மொழி வழிக் கல்வி பயிலும் நாடுகள். இங்கு ஆங்கிலத்திற்கு வேலையே இல்லை. எனவே ஆங்கில வழிக் கல்வி இங்கு இல்லை.

நம் குழந்தைகளின் அறிவியல் புத்தகம் குஜராத்தி மொழியிலோ, பஞ்சாபி மொழியிலோ இருந்தால் அதைக் கற்பது எவ்வளவு கஷ்டம். ஏனெனில் அந்த மொழி நமக்குத் தெரியாது. அப்படி என்றால் தெரியாத மொழியான ஆங்கிலத்தில் பாடத்திட்டங்கள் அனைத்தும் இருந்தால் அது குழந்தைகளுக்கு எப்படி புரியும்? தமிழ் நாட்டில் தமிழிலும், ஆந்திராவில் தெலுங்கிலும், கேரளாவில் மலையாளத்திலும் அவரவர் தாய் மொழியில் சொல்லிக் கொடுப்பதே தரமான கல்வி. இன்று ஆங்கில வழியில் படிக்கும் நம் குழந்தைகள் பாடத்தின் சாரத்தை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற்றாலும் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் ஆழ்ந்த சிந்தனையும், அறிவும் இல்லாதவர்களாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கல்வி என்பது புரிந்துகொள்ளவும், மாற்றி அமைக்கவும். குழந்தையை சிந்திக்க வைப்பதே கல்வியின் அடிப்படை. கல்வி தாய்மொழி வழியில் இருந்தால் மட்டுமே சிந்தனை தூண்டப்படும். சிந்தனை தூண்டப்பட்டால்தான் புதிய கண்டுபிடிப்புகளை நம் குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியும். நமது குழந்தைகளின் வகுப்பறையில் ஏசி இருக்கலாம். புரஜெக்டர் வைத்து ஒளித்திரையில் படம் காட்டலாம். ஆனால் அங்கே கற்றல் இருக்குமா?  நான் குழந்தையிடம் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் எனில் குழந்தையின் தாய் மொழியில் சொன்னால் தானே குழந்தைக்கு அது புரியும். உலகில் பல்வேறு ஆய்வுகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கல்வி சம்பந்தமாக அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் போன்ற பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளும், 2005 தேசிய கல்வி வழித் திட்டம் மற்றும் 2009ல் உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டமும் பரிந்துரைப்பது தாய்மொழி வழிக் கல்வியே. உலகின் அனைத்து மொழியியல் அறிஞர்

களும் வலியுறுத்துவது இதைத்தான்.

குழந்தைக்கு எந்த மொழி தாய் மொழியோ, குழந்தையால் எந்த மொழி வழியே நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறதோ, எந்த மொழியில் குழந்தை சிந்திக்குமோ, குழந்தைக்கு எந்த மொழியில் ஆளுமை (dominant) அதிகமோ, அந்த மொழியே மீடியமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் ஆசிரியரிடம் இருந்து ஆங்கிலம் வழியாக வரும் பாடத் தகவல்களை தமிழ் மொழி பேசும் மாணவர்கள் பெறுவது எப்படி சரியாக இருக்கும். செய்திகளை சொல்பவருக்கும் (transmitter) பெறுபவருக்கும் (receiver) மீடியம் ஒன்றாக இருத்தலே கற்றல் கற்பித்தல் முறை.

அதாவது கற்றுத் தரும் ஆசிரியருக்கும் அதை பெறும் மாணவருக்கும் மீடியம் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டு குழந்தைக்கு தமிழ் மொழியே மீடியம். பிழைப்புத் தேடிச் செல்பவர்கள் எங்கு செல்கிறார்களோ அந்த மொழியைக் கற்கிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினருக்கு தமிழ் மொழி சூழல் மொழி. நம் குழந்தை வேறு நாட்டில் வேறு சூழலில் வாழ நேர்ந்தால் உங்கள் குழந்தைக்கான ஆளுமை மொழி அந்த நாட்டின் சூழலுக்கு மாறலாம். மற்றபடி தமிழ்நாட்டில் தமிழ் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அதிகம் ஆளுமை கொண்ட மொழி தமிழ்தான்.

மிகப் பெரிய பள்ளிகளில் லட்ச லட்சமாக பணத்தை செலவழித்து படிக்க வைத்தாலும், நம் குழந்தைகளின் மீடியம் மொழி, ஆளுமை மொழி தமிழ் எனும்போது குழந்தையின் கல்வியும் தமிழில்தான் இருக்க வேண்டும். அறிவியல் பாடத்தையும் தமிழில்தான் கொடுக்க வேண்டும். பிற மொழிகளையும் தமிழ் வழியாகத்தான் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் தன்னம்பிக்கை உயரும். சம்பந்தமே இல்லாத மொழியில் உள்ள எழுத்தைக் கற்றுக்கொடுப்பது போன்ற வன்கொடுமை வேறெதுவும் இல்லை. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது.

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் கற்க தரமான கரும்பலகை இருக்கா? அவர்கள் பயன்படுத்த தரமான கழிப்பறை வசதி இருக்கா? போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாடம் சொல்லித்தர லேட்டஸ்ட் டெக்னாலஜி வசதிகள் இருக்கா? இவையெல்லாம் பிரச்சனை இல்லை. ஆங்கிலம் மட்டுமே பிரச்சனை. அதற்காகத்தான் தனியார் பள்ளி நோக்கிச் செல்கிறார்கள் என்பது எத்தகைய ஏமாற்று வேலை.

*அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் முழுமையாகத் தெரியுமா?

*கிராமப்புறம் சார்ந்த பள்ளிகளில் +2 முடித்தவர்களும், அஞ்சல் வழியில் படித்தவர்களும் குறைவான ஊதியத்தில் ஆசிரியர் பணியில் இருக்க, அவர்களால் ஆங்கிலத்தை சரளமாகச் சொல்லித் தர முடியுமா?

*தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு முழுமையாக இருக்கிறதா? சரியாகப் பேசுகிறார்களா?

அமெரிக்காவில் பிச்சை எடுப்பவன் கூட ஆங்கிலத்தில் பேசுகிறான் என்றால், அவனுக்கு அறிவியல் அறிவு இருப்பதாக அமெரிக்க  நிறுவனங்கள் ஏன் வேலை கொடுப்பதில்லை? நம் கடந்த தலை முறை பெற்றோரில் பலர் தமிழ் வழியில் படித்து சிறப்பாக ஆங்கிலம் பேசினார்கள். மேலும் பன்னாட்டு நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் பணி செய்பவர் பிரான்ஸ் மொழியில் பணி செய்கிறார். உடன் பணி செய்பவரிடம் பிரான்ஸ் மொழி பேசுகிறார். அதே நிறுவனத்தின் ஜப்பான் கிளையில் ஜப்பானிய மொழியில் பணிகள் நடக்கிறது.

சீன நாட்டின் கிளையில் சீன மொழியில் பணி செய்கிறார்கள். இந்த நாடுகளில் தவிர்க்க முடியாத தேவைகளுக்கு மட்டுமே மீடியேட்டர் மூலம் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் அதே பன்னாட்டு நிறுவனத்தின் தமிழ்நாட்டுக் கிளையில் மட்டும் ஆங்கிலத்தில் பணி செய்கிறார்கள், ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால் இது யார் தவறு?

ஆங்கிலம் என்பதும் ஒரு மொழி அவ்வளவே. அதைத் தெரிந்திருப்பது மொழி அறிவு மட்டுமே. அதுவே குழந்தையின் அறிவாகிவிடாது. தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க நினைக்கும் பெற்றோர் நீங்கள் எனில் ‘மக்கள் திரை’யின் கல்வியை அளிக்கும் ஆங்கில மாயை ஆவணப்படத்தை தவறாமல் பாருங்கள்.நமது குழந்தைகளின் கல்விக்காக பள்ளியா? தனியார் பள்ளியின் வியாபாரத்திற்காக உங்கள் குழந்தைகளா? என்பதை பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வெ.பி.வினோத்குமார், ஆவணப்பட இயக்குநர்

பொறியியல் முடித்து கல்லூரி விரிவுரையாளராகப் பணியில் இருந்தபோது பெரியாரும், மார்க்ஸும் என்னை ஈர்த்தார்கள். இடதுசாரி அமைப்புகளின் மீது கவனம் திரும்பியது. மற்ற அரசியலோடு கல்வி அரசியல் மீதும் எனக்கு விமர்சனம் இருந்தது. அது குறித்த வாசிப்புகளும் இருந்த நிலையில், காட்சி ஊடகத்தின் மீதும் என் கவனத்தை திருப்பினேன்.

அது 2013 காலகட்டம். அரசுப் பள்ளிகளில் ஜெயலலிதா அரசு ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்தது. நான் படித்தது தமிழ் வழிக் கல்வி என்பதாலும், கல்லூரி விரிவுரையாளராக எனக்கு இருந்த அனுபவத்திலும் தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்த ஆவணப்படம் உருவாக்கும் எண்ணம் வரவே அது சார்ந்த வாசிப்புகளை மேலும் தீவிரப்படுத்தினேன்.

தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முனைப்பில் ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்கிற ஆவணப் படத்தை 2017ல் இயக்கினேன். ரயில் மற்றும் பேருந்து பயண பரப்புரை மூலம் மட்டும் 19000 குறுந்தகடுகளை மக்களிடம் சேர்த்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வைத்தது. குறுந்தகடுகளை பெற்றவர்கள் என்னிடத்தில் பேசினார்கள்.

விவாதித்தார்கள். சந்தேகங்களையும் முன் வைத்தார்கள். பல பெற்றோர்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆங்கிலம் மீடியம் பள்ளியில் இருந்து தமிழ் மீடியம் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றியும் இருக்கிறார்கள். தொடர்ந்து கல்வி தொடர்பாக அடுத்தடுத்த ஆவணப் படங்களையும் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். நடுவில் ‘நீட் பிரச்சனை’ வந்ததில் நீட் தொடர்பான ஆவணப் படமும் தயாராகி வருகிறது. விரைவிலேயே தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணர்வார்கள். 2025ல் கல்வியில் மிகப் பெரிய மாற்றம் உருவாகும்.

தமிழ் ஆங்கிலமானால் தரம் உயருமா?

*அரிஸ்டாட்டிலும், கோப்பர் நிகஸூம், கலிலியோவும், ஐன்ஸ்டீனும் ஆங்கிலேயர் அல்ல.

*ஆங்கிலம் படிக்காத, அவரவர் தாய்மொழி கற்ற நாடுகளாலே 90% விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

*கணிதமேதை சீனிவாச இராமானுஜர் இறுதிவரை தனது தாய்மொழியான தமிழில்தான் படித்தார்.

*ஜி.டி.நாயுடு, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற இந்திய  விஞ்ஞானிகளும், முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியனும், இப்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய நாராயண மூர்த்தியும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள்.

தாய் மொழி கல்வியே சிறந்தது

*உலகின் தலைசிறந்த கல்வி கொடுக்கும் நாடான பின்லாந்தில் 7 வயதில்தான் பள்ளிக் கல்வி ஆரம்பம் ஆகிறது.

*வியத்தகு சாதனைகளைச் செய்யும் சீனாவின் தாய்மொழி மாண்டரின்.

*2ம் உலகப் போரில் இரண்டு அணுப் பேரழிவுகளைச் சந்தித்து அறிவியலில் உச்சம் தொட்ட ஜப்பானில் தாய்மொழிக் கல்வியே உள்ளது.

*தாய் மொழியில் படித்த கியூபா மருத்துவர்கள்தான் உலகின் மிகச் சிறந்த மருத்துவர்களாக, உலகின் எந்தப் பகுதியில் மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் உதவிக்கும் நிற்கிறார்கள்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: கங்காதரன்

Related Stories: