ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குடியாத்தம்: ஆந்திர வனப்பகுதிகளில் பெய்யும் கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்து, குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கவுண்டன்யா மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 465 மீட்டர் நீளமும் 11.50 மீட்டர் உயரமும் உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 261.36 மில்லியன் கன அடி ஆகும்.

இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது குடியாத்தம் நகரம், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். ேமலும் 19 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் மோர்தானா அணை நிரம்பும். கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை காரணமாக முன்கூட்டியே மோர்தானா அணை நிரம்பியது.

இதையடுத்து மோர்தானா அணை திறக்கப்பட்டு ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 1 மாதமாக ஆந்திர வனப்பகுதியில் பெய்து வந்த கோடை மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று அதிகாலை அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறியது. இந்த உபரிநீர் ஏரி கால்வாய் வழியாக அக்ராவரம், பெரும்பாடி வழியாக சென்று குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு செல்கிறது.

இந்தாண்டு முன்கூட்டியே அணை நிரம்பி வழிவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் மோர்தானா அணைக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். மழை ெதாடர்ந்தால் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் மூலம் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

சுற்றுலாத்தலமாக்க மக்கள் கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை பிரிப்பதற்கு முன்பு ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கியது. தற்போது மாவட்டம் பிரித்த பிறகு ஏலகிரி திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்ந்து விட்டது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள மோர்தானா அணை இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வந்து செல்கின்றனர்.

ஆனால் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. எனவே மோர்தானா அணையை சுற்றுலா தலமாக மாற்றி பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா, உணவு விடுதி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: