ஜோலார்பேட்டை அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்: அசம்பாவிதம் ஏற்படும் முன் மாற்ற கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே மின் கம்பம் உடைந்து ஆபத்தான நிலையில் முட்டு வைக்கப்பட்டு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி, காமராஜ் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மின் ஒன்று அடியில் உடைந்து சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ஜோலார்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பத்தை மரத்தின் மூலம் மூட்டு வைக்கப்பட்டு மாற்று கம்பம் அமைப்பதாக அறிவித்துச் சென்றுள்ளனர். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

மேலும் இந்த வழியாக காமராஜ் நகர் உள்ளிட்ட 3 பகுதிகளுக்கு வாகனம் இல்லாத பெரியவர் முதல் சிறியவர் வரையுள்ள நபர்கள் அவ்வழியாக ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: