அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

சிவகாசி: கடந்த அதிமுக ஆட்சியில் திருத்தங்கல்லில் அனுமதியின்றி போடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மண்டல பகுதியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தினமும் மானூரில் இருந்து வரும் 15 முதல் 20 லட்சம் லிட்டர் மூலம் 23 நாட்கள், 28 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

மேலும் மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் டெபாசிட் கட்டாமல் அனுமதியின்றி கொடுக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும் மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிக்கும் குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் திருத்தங்கல் மண்டல பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக திருத்தங்கல் மண்டலத்தில் அனுமதியின்றி கொடுக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் தயக்கம் இன்றி உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பு வசூல் கட்டணம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளது. திருத்தங்கல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பிற்கு அதிமுகவினர் ரூ.25 ஆயிரம் வசூல் செய்துள்ளனர்.

வசூல் செய்த பணத்தில் நகராட்சி அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து நகராட்சிக்கு டெபாசிட் கட்டாமல் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு ஆண்டுதோறும் நகராட்சிக்கு வர வேண்டிய குடிநீர் வரியும் பாதிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுகவினர் கோடிக்கணக்கில் முறையின்றி பணம் வசூல் செய்துள்ளனர்.

Related Stories: