ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ்சத்திரம் கிராமத்தில் ஸ்ரீஏகாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 14ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை அம்மனுக்கு நாள்தோறும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கிராமத்தை சேர்ந்த சுமார் 300 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து புனித நீராடி மாலை கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த, தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை விளக்கணாம்பூடி புதூரில் திரவுபதி அம்மன் தீமிதி திருவிழா கடந்த 18 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி, தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடைபெற்றது.  விழாவில், இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழாவையொட்டி 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மாலை தீமிதி திருவிழாவில் பங்கேற்று அம்மனை வழிபட பெண்கள் உட்பட பெரும் திரளான பொதுமக்கள் கோயில் முன்பு குவிந்தனர்.

அப்போது, திடீரென கனமழை கொட்டியது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர் மழை பொருட்படுத்தாமல் காப்பு கட்டிய பக்தர்கள் கோயில் முன்பு குவிந்தனர். அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டும் மழையில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு உயர் நீதிமன்றம் அனுமதியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் மழை பொருட்படுத்தாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் பிரமிளா வெங்கடேசன் தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: