100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவள்ளிமலை சுயம்பு வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவள்ளிமலை சுயம்பு வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. செங்கல்பட்டு அருகே பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தில் சுயம்புவாக தோன்றிய பிரசித்திபெற்ற ஸ்ரீவள்ளிமலை சுயம்பு வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புனரமைக்கப்பட்டு  கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுற்றுவட்டார கிராம மக்களின் பொருளுதவியுடன் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை உள்பட பல்வேறு ஹோமங்கள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன. தொர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதில், மோசிவாக்கம், கண்டிகை, திருமணி, பொன்விளைந்த களத்தூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: