குன்னப்பட்டு கிராமத்தில் சாயி பல்கலைக்கழகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே குன்னப்பட்டு கிராமத்தில், சாயி பல்கலைக்கழகம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். சென்னை அருகே பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் அடுத்த குன்னப்பட்டு ஊராட்சியில் சாயி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் முதல் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் இரண்டாம் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும் நிறுவனருமான கே.வி.ரமணி தலைமை தாங்குகிறார். சாயி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜம்ஷெட் பரூச்சா வரவேற்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் முதல் கட்டிடத்தை திறந்து வைத்து, இரண்டாம் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறு குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர் பையனூர் சேகர், குன்னப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜி மோகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: