மாநில அளவிலான அலுவலர்களுடன் உணவு பாதுகாப்பு, குடும்ப நலம் பற்றிய கலந்தாய்வு கூட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை

சென்னை: உணவு பாதுகாப்பு, குடும்ப நலம், தொழுநோய் ஒழிப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை, குடும்ப நலத் துறை, காசநோய் தடுப்பு திட்டம், தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஆகிய துறை ரீதியிலான மாநில அளவிலான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு அலுவலர் செந்தில்குமார். தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர்உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், தொழுநோய் ஒழிப்பு  திட்ட கூடுதல் இயக்குநர் அமுதா. உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர்  தேவபார்த்தசாரதி குடும்ப நல இயக்குநர் ஹரிசுந்தரி காசநோய் தடுப்பு திட்ட கூடுதல் இயக்குநர் ஆஷா பிரடரிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு துறைகளுக்கு அறிவுறை வழங்கினார்: உணவு பாதுகாப்புத் துறை: அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுவதை உறுதி செய்யவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். உணவு மாதிரி எடுத்தல்,  தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்து வகை இறைச்சி. மீன். முட்டை, பால்பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளுதல் ,செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது, பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர், குளிர்பானங்கள் காலாவதியான பிறகு விற்பனை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்ப நலத் துறை: தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் இரு குழந்தைகளுக்கிடையேயான இடைவெளி சுமார் 5 லட்சம் பிரசவங்களில் 36 மாதங்களுக்குட்பட்டதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும். தொழுநோய் ஒழிப்புத் திட்டம்: வரும் 2025 ம் ஆண்டிற்குள் மாநிலத்தை தொழுநோய் அற்ற மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். காசநோய் ஒழிப்புத் திட்டம்:  2025 ம் ஆண்டில் காசநோய் இல்லா தமிழகம் என்னும் இலக்கை அடைய மாவட்டம் வாரியான திட்டங்கள் அமைத்து அதை செயல்படுத்த வேண்டும். 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனத்துடன் கூடுதலாக 28 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் விரைவில் மாவடங்களுக்கு வழங்கப்படும்.

Related Stories: