ஆட்டோ பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பு டிரைவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கைதானவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மாவு மில் உரிமையாளர் பசுவண்ணன் என்பவரை தாக்கியதாக அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் மதன்குமார் ஆகியோரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கடுமையாக தாக்கியதுடன், மதன் குமாரின் ஆட்டோவை பறிமுதல் செய்து, ஆட்டோவின் பதிவு எண்ணை தவறாக குறிப்பிட்டதால் அதை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும், மேலும் தங்களை துன்புறுத்திய குன்றத்தூர் ஆய்வாளர் சார்லஸ், காவலர்கள் சபரி, வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரகாஷ் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்து வருவாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு ரூ.2 லட்சத்தை  இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த தொகையை ஆய்வாளர் சார்லசிடம் இருந்து ரூ.1 லட்சம், காவலர்கள் இருவரிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வசூலிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Related Stories: