தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை

சென்னை: தாய்லாந்தில் கடத்திவந்த அரியவகை குரங்கு, முள்ளம்பன்றி விலங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடைக்குள் வெள்ளைநிற முள்ளம்பன்றி மற்றும் டாமரின் மங்கி எனும் அரிய வகை வெளிநாட்டு குரங்கு குட்டியை வைத்திருந்தார்.

இதுகுறித்து அந்நபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும், வெளிநாட்டிலிருந்து இதுபோன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையில் தெரிவித்து, முறையான அனுமதி பெறவேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரிடம் இந்த 2 அரியவகை உயிரினங்கள் எடுத்து வருவதற்கு முறையான ஆவணங்கள் எதுவுமில்லை எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, முள்ளம்பன்றி, குரங்கு குட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, விலங்குகளை ஆய்வு செய்தனர். பின்னர், முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் 2 விலங்குகளும் வந்துள்ளதால், அவற்றை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், பிடிபட்ட நபரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: