புதுச்சேரியில் பரபரப்பு அரசு கல்லூரி விழாவில் மாணவிகள் திடீர் மோதல்: வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் இந்த மாதம் முதல் வாரத்தில் பிரெஞ்ச் துறை சார்பில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு ஆங்கில துறையை சேர்ந்த மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது, பிரெஞ்ச் துறை மாணவிகள் அவர்களை வழிமறித்து, மற்ற துறை மாணவிகள் விழாவுக்கு வர அனுமதியில்லை என கூறியுள்ளனர். இதனால் கோபத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர். தொடர்ந்து, கடந்த 11ம் தேதி ஆங்கிலத்துறை சார்பில் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவுக்கு பிரெஞ்ச் துறையை தவிர்த்து அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதன்படி விழாவும் நடைபெற்றுள்ளது. அப்போது, பிரெஞ்ச் துறையை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் வந்துள்ளார். அவரை எப்படி வரலாம் என ஆங்கிலத்துறை மாணவிகள் கேள்வி எழுப்பி திட்டியுள்ளனர். பதிலுக்கு பிரெஞ்ச் துறை மாணவியும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளனர்.

இப்பிரச்னை குறித்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பிரெஞ்ச் துறை மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவி, தனது இன்ஸ்டாகிராமில், ஆங்கிலத்துறை மாணவிகளை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். மறுநாள் வகுப்புகள் முடிந்து கல்லூரியில் இருந்து வெளியே வந்த ஆங்கிலத்துறை மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரெஞ்ச் துறை மாணவி தாக்கப்பட்டார்.

இதையடுத்து, பிரெஞ்ச் துறை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கடந்த 13ம் தேதி கல்லூரி வளாகத்திற்குள் வந்து மகளை தாக்கிய மாணவியை அடித்துள்ளனர். இதற்கிடையே பிரிவுபசார விழாவிலும், கல்லூரிக்கு வெளியேயும் மாணவிகள் தாக்கி கொண்ட சம்பவத்தின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: