சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது

விருத்தாசலம்: சில்லரை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாமக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர். சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை வந்தது. அந்த பஸ் கண்டக்டர் மணிகண்ணனுக்கும், பெண் பயணி ஒருவருக்கும் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண் பயணி விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சிதம்பரத்தில் இருந்து வந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் மணிகண்ணனை தாக்கியதோடு ஆட்டோவில் அவரை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த அரசு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டக்டரை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார், கண்டக்டர் மணிக்கண்ணனை மீட்டதோடு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த கோவிந்தன் (20), மோகன்ராஜ் (40), வெங்கடேசன், நகராட்சி 27வது வார்டு பாமக கவுன்சிலரும், மாவட்ட வன்னியர் சங்க தலைவருமான சிங்காரவேல், அசோக்குமார்(19), ஆட்டோ டிரைவர் மற்றும் ஒருவர் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கோவிந்தன், மோகன்ராஜ், அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யபபட்டனர். தலைமறைவாக மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர்.

Related Stories: