கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் கத்திக்குத்து: சக மாணவன் ஆத்திரம்

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பன்னியள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வுகள் இல்லாத நேரத்தில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி நடந்த சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது மாணவர்களில் ஒருவன் பள்ளி வளாகத்தில் கிடந்த மாங்கொட்டையை எடுத்து, உடன் படிக்கும் மற்றொரு மாணவன் மீது வீசியுள்ளான். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த சிறப்பு வகுப்புக்கு, மாங்கொட்டையை எடுத்து வீசிய மாணவன் வரவில்லை. இதனால் மற்றொரு மாணவன், நேற்று நீ பள்ளிக்கு வந்திருந்தால், உன்னை தீர்த்துக்கட்டியிருப்பேன் என தெரிவித்து, செல்போனில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளான். நேற்று நடந்த சிறப்பு வகுப்புக்கு 2 மாணவர்களும் வந்தனர். அப்போது வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய மாணவன் கத்தியால், சிறப்பு வகுப்புக்கு வராத மாணவனின் இடது தோள்பட்டைக்கு கீழ் குத்தினான். உடனடியாக ஆசிரியர்கள், அவனை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் குத்திய மாணவனை, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: