அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: அரசின் ஒரு துறையாக விளங்கும் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வேலூர் பாலாற்றங்கரை செல்லியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘அறநிலையத்துறை அரசின் ஒரு துறை. இதில் எது நடந்தாலும் தமிழக அரசுதான் பொறுப்பு. இவ்விழாவில் ஒரு குறை உள்ளது. இங்கு விழா ஆரம்பிக்கும்போது இறைவாழ்த்து பாடினார்கள். அமைச்சர்கள் கலந்து கொண்ட விழா இது. தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது நியதி. வரும் நாட்களில் அதை கண்டிப்பாக கடைபிடிக்க ேவண்டும். இங்கு பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழு சிறப்பாக செயல்பட வேண்டும். பாரபட்சமின்றி அறங்காவலர்களை போடவேண்டும்’’ என்றார். முன்னதாக எம்பிக்கள் கதிர்ஆனந்த், ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.

Related Stories: