தேசிய தேர்வு முகமை அறிவிப்பு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளை தவிர, பி.எஸ்சி நர்சிங் மற்றும் லைப் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் இப்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாள் மே 6ம் தேதி என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மேலும், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 20ம் தேதி, இரவு 9 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இளங்கலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,600, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ரூ.1,500, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.900 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2016 முதல் 2021ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட நீட் தேர்வுகள் 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில், 2022ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Related Stories: