மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்ப வரும் 24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.6.2022 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்  - 24.5.2022, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - 31.5.2022, வேட்பு மனு பரிசீலனை - 1.6.2022, வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள கடைசி நாள் - 3.6.2022, வாக்குப் பதிவு நாள்  -  10.6.2022, வாக்குப் பதிவு நேரம் - காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்  -  10.6.2022 மாலை 5 மணி முதல், தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள்  -  13.6.2022.

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது. வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.5.2022 முதல் 31.5.2022 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881ம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 28.5.2022 (வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை) மற்றும் 29.5.2022 (ஞாயிற்றுக்கிழமை) தவிர பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு, தேவைப்படின், சட்டமன்ற  குழுக்கள் அறையில் 10.6.2022 அன்று நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: