சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு வேலை கிடைக்கவில்லை என்ற நிலையை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு

சென்னை: வேலை கிடைக்கவில்லை என்ற நிலையை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு என்று சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு  விழாவில் தலைமை விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையில் கூறியதாவது: கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும், எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணமானவர்களை உருவாக்கிய இடம்தான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம். அத்தகைய திறமைசாலிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று நான் மனதார, உளமார வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் மேன்மை பெற்றவர்களாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழக அரசின் மிகமிக முக்கியமான இலக்காக இது அமைந்திருக்கிறது. அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

தமிழக மக்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான்,  அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய திட்டம்தான் இந்த அற்புதமான திட்டம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ‘வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை’ என்று சொல்கிறார்கள். அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது.

அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது. மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதில் பெறும் வகையில், ‘நான் முதல்வன்’என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது. தகுதியான இளைஞர்கள் வேலைக்குக் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக் கூடாது. அத்தகைய நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் பல திட்டங்களைத் தீட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும், ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் சேர்ந்து, படிப்பு முடியும் வரை, மாணவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000  செலுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம், கல்வி உதவித்தொகை, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை, நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், மாணவர்களுடைய நலன்கருதி தொடர்ந்து வழங்கி வரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.     

அரிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை மின்மயம் ஆக்குவதற்காகச் சென்னைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனம், இத்தாலி நேபிள்ஸ் பல்கலைக்கழகம், மெல்போர்ன் பல்கலைக்கழகம், பெருங்குடி மிசிஜி அகாடமி, ஒன்றியக் கல்வி  அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய மகாத்மா காந்தி தேசிய கிராமக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு அறிவுசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருநங்கைகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி கொண்டிருக்கக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், இளநிலை மற்றும் முதுநிலையில் இலவசமாக படிப்பு வழங்கப்படும் என்கிற திட்டம், எல்லாவற்றையும் விட எனக்கு உண்மையில் மனமார்ந்த மகிழ்வைத் தருகிறது.  

அனைவருக்கும் சமமான சமூகநீதி என்ற தமிழ்நாடு அரசின் உயரிய திராவிட நோக்கத்தை, உயர்கல்வியில் நிறைவு செய்யும்வகையில் சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், 2022-2023ம் கல்வியாண்டு முதல், இளநிலை பயிலும் மாணவர்களுக்குச் ‘சமூகநீதி’மற்றும் ‘திருக்குறள் காட்டும் தொழில்நெறி’ ஆகிய பாடங்கள் விருப்பப் பாடங்களாக இடம்பெற இருப்பதைப் பாராட்டி நான் மகிழ்கிறேன். ஆகவேதான் காமராசர் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல,  முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்பதைப் போல , எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்  தமிழக ஆளுநருக்கு  என்னுடைய  நன்றி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: