மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் தனியார் ரிசார்ட்டில், அனைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை நடத்தினார். உலக நாடுகள் பங்கேற்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜூலை 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 200 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்த உள்ளனர். இந்த நிலையில், போட்டி நடைபெறும் அரங்கு, புதிதாக அமைய உள்ள அரங்கு, வாகன நிறுத்தம், போட்டி நடைபெறும் இடத்தின் வரைபடம் ஆகியவைகளை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், அனைத்து துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார்.

இது குறித்து, நிருபர்களிடம் கூறுகையில், ‘உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் மண்ணில் நடைபெற உள்ளது. இன்று (நேற்று) அனைத்து துறை அதிகாரிகளுடன் வந்து போட்டி நடைபெறும் அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த, போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜூலை 10ம் தேதிக்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த போட்டியும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தான் நடக்க உள்ளது.

ரிசார்ட்டில், ஏற்கனவே உள்ள அரங்கத்திற்கு அருகே மற்றொரு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முதல்வரின் நேரடி பார்வையில் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர், மு.க.ஸ்டாலின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  இதில், செங்கை கலெக்டர் ராகுல் நாத், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்த்குமார், விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா, போட்டி நடக்க உள்ள இடத்துக்கான சிறப்பு அலுவலர் சங்கர், செங்கல்பட்டு எஸ்.பி.சுகுணா சிங், இந்திய செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் பொது செயலாளர் பரத் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: