சென்னையில் ‘ரூட் தல’ பிரச்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கர மோதல்: பட்டாக்கத்திகள், பீர் பாட்டில்கள் பறிமுதல்; 5 மாணவர்களை பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை: சென்னையில் ‘ரூட் தல’ பிரச்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 5 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ரூட் தல பிரச்னை குறித்து போலீசார் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் ரூட் தல பிரச்னையில் பொது இடங்களில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே திருத்தணி மற்றும் பூந்தமல்லி செல்லும் போது யார் அந்த பகுதியில் ரூட் தல பிரச்னை கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணி வழித்தடத்தில் செல்லும் மாணவர்கள், பூந்தமல்லி செல்லும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், திருத்தணி வழித்தட மாணவர்களை பூந்தமல்லி வழித்தட மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் திருத்தணி வழித்தட மாணவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று காலை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருத்தணி மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்து வரும் மாணவர்களிடையே பூந்தமல்லி பகுதியில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சாலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் பூந்தமல்லி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  இந்த தகவல் பச்சையப்பன் கல்லூரியில் வகுப்புக்கு வந்த மாணவர்களிடையே பரவியதால் ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகே ஹாரிங்டன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தின் கீழ் 2 பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். அதில் ஒரு பையில் பட்டாக்கத்திகள், மற்றொரு பையில் பீர் பாட்டிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கல்லூரி வளாகத்திற்குள் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள மறைத்து வைத்திருந்த பையை எடுக்க மாணவர்கள் வந்தனர்.

அப்போது போலீசார் துரிதமாக செயல்பட்டு மோதலில் ஈடுபட முயன்ற 5 மாணவர்களை பிடித்தனர். ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த 2 பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் பிடிபட்ட 5 மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். மேலும், ஆயுதங்கள் மறைத்து வைத்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். ரூட் தல பிரச்னையால் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பச்சையப்பன் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: