ஆதிதிராவிட, பழங்குடியின துறையில் 10,402 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 குறைவுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்ட அரசாணை: 2021-22ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில், அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் என மொத்தம் 10,402 கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் சட்டம் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளால் தெரிவு முகமைகள் மூலமாக நிரப்பம் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, அனைத்து துறைகளிலும் தொகுதி அ,ஆ,இ மற்றும் ஈ வாரியாக காணப்படும் குறைவுப் பணியிடங்களை அத்தொகுதியில் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் நியமிக்க வேண்டும். மேலும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்களில் காணப்படும் குறைவுப் பணியிடங்களை அப்பதவிகளிலேயே நியமனம் மேற்கொள்ளலாம். தொகுதி வாரியாக கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை அத்தொகுதியின் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் நியமிக்கும் பொருட்டு துறைத்தலைவர் தலைமையிலான குழுவினை உருவாக்கி, அத்தொகுதியில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் போன்றவற்றினை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து உரிய செயல் ஆணை தெரிவு முகமைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்பட வேண்டும்.

இது துறை தலைமை அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் என இடஒதுக்கீட்டினை பின்பற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பின்பற்ற வேண்டும். காலிப்பணியிடங்கள் இல்லாத நேர்வுகளில் குறைவுப் பணியிடங்களை நேரடி நியமனப் பதவிகளில் நியமனம் மேற்கொள்வதற்கு வரும் ஆண்டுகளில் உருவாகும் காலியிடங்களின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளத்தக்க வகையில் ஆணைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டு நிரப்பப்பட வேண்டும். குறைவுப் பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்ப அனைத்து தெரிவு முகமைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் அனைத்து பதவிகளும் நிரப்ப இயலாத நேர்வினில் தெரிவு முகமைகள் உரிய முடிவுகளை மேற்கொண்டு நிரப்பம் மேற்கொள்வதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி நிரப்பம் செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: