சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு தமிழகத்தில் 5ல் ஒருவருக்கு சிறுநீரக குறைபாடு

சென்னை: தமிழகத்தில் ஐந்தில் ஒரு வருக்கு சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ வினாயகம் கூறியதாவது: தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை கடந்த பிப்ரவரி மாதம் 177 வட்டாரங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தியது. அதன்படி 4,741 பேரிடம் இதற்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் 5 பேரில் ஒருவருக்கு சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் சிறுநீரக கோளாறுகள் குறித்த போதுமான தரவுகள் இல்லாததால் முதல் முறையாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த  ஆய்வுக்காக 4,741 பேரிடம் எடுத்த மாதிரிகளின் மூலம், 455 பேருக்கு (9.5%) கிரியேட்டினின் அளவு அதிகரித்துள்ளது. 276 பேருக்கு (5.8%) சிறுநீரில் அல்புமின் இருப்பதும், 367 பேருக்கு (7.7%) ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் 934பேருக்கு  (19.7%) சிறுநீருடன் ரத்தம் அல்லது அல்புமின் என்கிற புரதச் சத்து வெளியாவதும் அல்லது அளவுக்கு அதிகமான கிரயேட்டினின் சிறுநீரில் இருப்பதும் தெரியவந்துள்ளதுஇந்த துறை மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் ஓரளவுக்கு நாங்கள் கடுமையான சிறுநீரக நோய் உள்ளவர்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

அது குறித்து உறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கு தேவை என்ன என்பதுதான் இப்போது அத்தியாவசியமாக இருக்கிறது. இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ வினாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறுநீரக நோய் குறித்த முறையான சர்வே செய்யும் மாநிலமாக இருக்கிறது என்று சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரக துறை இயக்குநர் டாக்டர் கோபால கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

Related Stories: